

தமிழ்நாடு அரசு 'தாய்மாமன் தங்க மோதிர' திட்டத்திற்கான தங்கத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மகளிர் நலன்' என்ற தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 'தாய்மாமன் சீர் பெட்டகம்' வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய், குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' என்ற பெயரில் அது அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெறுபவர், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு 'தாய்மாமன் தங்க மோதிர' திட்டத்திற்கான தங்கத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்குவதற்கான தங்கம் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
TNMSC சார்பில் திட்டத்திற்கு 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டெண்டரில் கூறப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.