வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்: 5 நாட்களுக்குபின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
 சிறிய ரக படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சிறிய ரக படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதன் மூலம் 3,500 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ராமேசுவரத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 விசைப் படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பெரிய மற்றும் சிறிய ரக படகுகள் பங்கேற்றன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதித்தது.

இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய ரக படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவதாக மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார். மேலும் பெரிய படகுகள் போராட்டம் தொடருவதாக தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி கிடந்த ராமேசுரவம் துறைமுகம் இன்று மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com