பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைப்பு

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
பேச்சிப்பாறை
பேச்சிப்பாறை
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, மாம்பழத்துறையாறு, பொய்கை, முக்கடல் அணைகள் நிரம்பியது.

மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பியது. மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று நிறுத்தப்பட்ட நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 4,200 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.91 அடியாக இருந்தது. அணைக்கு 2,215 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து 1,178 கனஅடி உபரி நீர் இன்று வெளியேற்றப்பட்டது. இதனால் குழித்துறையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மாவட்டம் முழுவதும் 1,250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 45 வீடுகள் இடிந்து விழுந்தது.

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 11 வீடுகளும், கல்குளத்தில் 17 வீடுகளும், விளவங்கோட்டில் 9 வீடுகளும், திருவட்டாரில் 8 வீடுகளும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். நடவு பணி நடந்திருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அருமநல்லூர், பூதப்பாண்டி, அக்கரை, ஈசாந்திமங்கலம், தக்கலை பகுதியில் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

பல இடங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த நெற்பயிர்களை சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com