

திருவள்ளூர்:
பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் அரசு சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் பாபு, மோகன், தேசிங்கு ராஜன், தணிகைவேல், பாசில் மற்றும் நிர்வாகிகள் கையில் கடிகாரங்களுடன் வந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீசிடம் மனு அளித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசின் சேவைகளை எளிய முறையில் மக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் ரேஷன் கார்டு, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் மற்றும் தொழிற்சாலை தொடங்க, உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி பெறுவது வரையிலான அனைத்து அரசு வேலைகள் குறித்த காலத்திற்குள் கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களின் அடிப்படை தேவைகளான சான்றுகள் உள்பட எந்த சேவைகளையும் எளிதில் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையை மாற்றி நிறைவான தரமான அரசு சேவை பெறுவதற்கு வழி வகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரக்கோரி மக்கள் நீதி மையத்தின் சார்பாக போராடி வருகிறோம்.
அரசுத் துறையில் கால நிர்ணயத்துடன் கூடிய அரசு சேவையை உறுதிப்படுத்த தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக கையில் கடிகாரத்துடன் வந்து கலெக்டரிடம் முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.