மதுரை அவனியாபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

5 மாத குழந்தையை தவிக்க விட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

அவனியாபுரம்:

மதுரை அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெருங்குடி கணேசபுரத்தில் வசிப்பவர் இசக்கியம்மாள். இவரது மகள் முத்துமாரி (வயது 21). இவர் பிரசாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் கழுவன் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பிரசாந்த் சென்றார். அங்கு அவர் கடந்த 11-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

தங்கைக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பாகவே தான் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் திட்டியதாகவும், அதனால் மனவேதனை அடைந்த பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் முத்துமாரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் செய்த கணவர் தன்னை மறந்து தற்கொலை செய்தது அவருக்கு மனவேதனை ஏற்படுத்தியது.

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் 5 மாத கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் சோகத்துடன் இருந்து வந்தார். தனது நிலை குறித்து பலரிடமும், முத்துமாரி புலம்பியுள்ளார்.

கணவரின் பிரிவை தாங்க முடியாத முத்துமாரி தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு முத்துமாரி கணவரின் சட்டையை அணிந்து கொண்டு, பிரசாந்த்தின் புகைப்படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தூக்கில் தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த உறவினர்கள் முத்துமாரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட முத்துமாரி தனது கையில் “மாமா பிரசாந்த் ஐ லவ் யூ” என்று பேனாவில் எழுதியுள்ளார். அதன் பிறகு தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

முத்துமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துமாரிக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசார ணையும் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com