ரூ. 10 கோடி பரிசு அறிவித்த நிலையில் கள் போதைப்பொருள் என்று வாதிடத்தயார்- குமரி அனந்தன் அறிவிப்பு

காந்தி மகான் விஜயவாடா சென்றபோது அங்குள்ள பெண்கள் காந்தியை சூழ்ந்து கொண்டு, ‘எங்கள் கணவன்மார் கள்ளைக் குடித்து போதை தலைக்கேறி எங்களையும் பிள்ளைகளையும் அடி அடியென்று அடிக்கிறார்கள் என்று கதறி அழுதார்கள்.
குமரி அனந்தன்
குமரி அனந்தன்
Published on

சென்னை:

காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ‘கள் போதைப் பொருள்’ என்று வாதாடி வென்றால் ரூ. 10 கோடி தருகிறோம். கள் இறக்க தமிழ் நாடு அரசு அனுமதி தராவிட்டால் அரசை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்துள்ளார்.

இதே நல்லசாமி 2012-ல் கள் உணவுப்பொருள் என்று கூறும் என்னோடு வாதாடி கள் போதைப்பொருளே என்று நிலைநாட்டுபவருக்கு ரூ. 1 லட்சம் தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

விவாதம் நடைபெறும் போது, வாதத்தைக் கேட்டு தீர்ப்பு சொல்ல ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆறுமுக சாமியை ஏற்பாடு செய்தார்.

கள் உணவுப் பொருள் என்று நல்லசாமியும், ‘கள் போதைப்பொருளே’ என்று நானும் வாதிட்டோம். நடுவர் ஆறுமுகசாமி குமரி அனந்தன் கூறியது போல் கள் போதைப்பொருளே என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் நல்லசாமி உறுதி அளித்தது போல் ரூ. 1 லட்சம் தரவில்லை.

அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, அவர் இப்போது அறிவித்துள்ள, ரூ. 10 கோடி போட்டிக்கு ஏற்பாடு செய்யட்டும். நான் கள் போதைப்பொருளே என்று மீண்டும் நிலை நாட்டத் தயார்.

காந்தி மகான் விஜயவாடா சென்றபோது அங்குள்ள பெண்கள் காந்தியை சூழ்ந்து கொண்டு, ‘எங்கள் கணவன்மார் கள்ளைக் குடித்து போதை தலைக்கேறி எங்களையும் பிள்ளைகளையும் அடி அடியென்று அடிக்கிறார்கள் என்று கதறி அழுதார்கள்.

அதை கேட்டு மனம் நொந்த காந்தி இந்த கள் எங்கிருந்து கிடைக்கிறது? என்று கேட்டபோது அங்கு நின்ற ஈச்ச மரத்தை காட்டினார்கள். உடனே அகிம்சா மூர்த்தி அங்கே கிடந்த கோடரியால் அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

பனை ஏறும் தொழில் தென் பகுதியில் அதிகம். அங்கே வைகுண்ட சுவாமி பக்தர்கள் நிறைய உண்டு. அவர்கள் பக்தியோடு அகிலத் திரட்டு அம்மாளை என்ற ஏட்டினை வாசிப்பார்கள். அதில் வைகுண்டசாமியின் அறிவுரை, ‘தாலமரயேறி, தைரியப்பால் வாங்கி ஆக்கிர கம் அடக்கி அருந்தி இரு என் மகளே!’ என்பதாகும்.

பனை மரம் மீது ஏறி, பாளை சீவி சுரந்து வரும் பனம் பாலில் அதிலிருக்கும் வெறித்தன்மையை சுண்ணாம்புத்தடவி அகற்றி பதநீராகக் குடிமகனே என்பதாகும். கள் கூடாது என்பது ஆண்டவன் கட்டளை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com