பா.ம.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை: மேலும் 2 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்

கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர்.
பா.ம.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை:  மேலும் 2 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்(வயது46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளராக இருந்தார். இவர் செங்கல்பட்டு நகரில், மணி கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நாகராஜ் பூக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாகராஜை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து நாகராஜ் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அறிந்ததும் நாகராஜின் உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். நாகராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதற்கிடையே இரவு 11.30 மணியளவில் கொலையாளிகளில் ஒருவன் செங்கல்பட்டு அடுத்த புலிபாக்கம் பகுதியில் ரெயில்வேபாதை அருகே தப்பி செல்வது தெரிந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

மேலும் பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீது கற்களை வீசியும் மற்றும் மறைத்து வைத்திருந்த கத்தியாலும் தாக்க முயன்றார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபர் மீது ஒரு ரவுண்டு சுட்டார். இதில் வாலிபரின் இடது காலில் குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. அவரது காலில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வன், சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படுகிறது.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். பா.ம.க. பிரமுகர் கொலையில் இதுவரை 3 பேர் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க. பிரமுகர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் சுட்டுபிடித்து உள்ள சம்பவம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நாகராஜ் கொலையை கண்டித்து இன்று காலை வணிகர் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் மறியலில ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com