தமிழகத்தில் கூடுதலாக 950 MBBS இடங்கள்: கல்விக் கட்டண உச்சவரம்பு நிர்ணயம்

மாநிலத்தில் உள்ள 78 மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 13,999 ஆக உயர்கிறது.
Tamil Nadu MBBS Seats increased to 950
Published on

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு:

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 950 எம்.பி.பி.எஸ் மருத்துவ சேர்க்கைக்கான பணியிடங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாக இந்திய தேசிய மருத்துவ ஆணையம்(NMC) தெரிவித்துள்ளது.

இதில் மூன்று அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட ஏற்கனவே உள்ள 13 கல்வி நிலையங்கள் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளன. மேலும் ஒரு புதிய தனியார் கல்லூரியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இதன்மூலம் 2026-27 கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள 78 மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 13,999 ஆக உயர்கிறது. இது முந்தைய ஆண்டில் 77 கல்லூரிகளில் இருந்த 13,049 இடங்களை விட அதிகமாகும்.

மேலும் இந்த கல்வியாண்டில் இந்தியா முழுவதும் உள்ள 529 கல்லூரிகளில் இளங்கலை எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1,13,500 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் 2,111 இடங்கள் உட்பட, கூடுதலாக 9,911 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,36,939 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவ கல்லூரிகள், தங்களது மாணவர் சேர்க்கையை 100 இடங்களில் இருந்து 150 இடங்களாக விரிவுபடுத்தியுள்ளன.

மீதமுள்ள 800 இடங்கள் தனியார் நிறுவனங்களில் சேர்க்கபட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக 150 இடங்களுடன் ஏபிஎஸ் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இத்துறையில் புதிதாக மருத்துவ சேர்க்கையை அறிமுகப்படுத்த உள்ளது.

என்.எம்.சி-யால் வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டு அட்டவணையில், தனியார் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்ட 800 இடங்களில், தற்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் சுமார் 150 இடங்களை தவிர, மீதமுள்ள இடங்கள் மாநில அளவிலான அட்டவணையில் சேர்க்கப்படும். அந்த மாநில அளவிலான சேர்க்கைகளை மாநில தேர்வுக் குழு நடத்தும்.

மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழுவால் நடத்தப்படும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் சேர்க்கையானது, நீட் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதில் இடஒதுக்கீடு என எதுவுமில்லை. மேலும், கல்விக் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் என்ற அளவில் உள்ளது.

இடஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணம் நிர்ணயம்:

தமிழ்நாட்டில் 60% வரை அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்களை வழங்கும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்கள், 69% இடஒதுக்கீடு விதியை பின்பற்றுவதோடு, அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% இடங்களையும் ஒதுக்குகின்றன.

மருத்துவ சேர்க்கைக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 4.35 லட்சம் முதல் ரூ. 5.40 லட்சம் வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரையிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com