வியட்நாமில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்: முதல்வர் விஜய்

படகு விபத்தில் இதுவரை 15 இந்திய சுற்றுலா பயணிகளும், 10 தமிழர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Assures All Support to Families of Tamils Killed in Vietnam Boat Tragedy
Published on

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 10 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா ஏற்பாடு செய்திருந்த ஊக்க பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலா பயணிகள் வியட்நாமிற்கு சென்றனர்.

இதையடுத்து ஹான் மே ரட் தீவில் இருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு, கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரையில் 15 இந்திய சுற்றுலா பயணிகளும், 10 தமிழர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பதிவில், “வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.

இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com