

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அடித்தளம் அமைக்கும் பணி காரணமாக, 10 மற்றும் 11-வது நடைமேடைகள் மூடப்பட்டன. இதனால், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி முதல் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமான ரெயில் சேவை குறைக்கப்பட்டு தற்காலிக கால அட்டவணைப்படி 20 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இரு மார்க்கத்திலும் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் எழும்பூர், சென்ட்ரலுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் விரைவு ரெயில்களை தவறவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்கமான புறநகர் மின்சார ரெயில் சேவை வருகிற 5-ந்தேதி முதல் தொடங்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பழைய அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயங்கத் தொடங்கும் என தெரிவித்துள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.