‘அரை சதவீதம் ஓட்டுவாங்கிய தே.மு.தி.க.வை வைத்துக்கொண்டு டூப்பு அடிக்கிறார் ஸ்டாலின்’ - இபிஎஸ் விமர்சனம்

திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல கொள்ளையடிக்கும் கூட்டணி என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
‘அரை சதவீதம் ஓட்டுவாங்கிய தே.மு.தி.க.வை வைத்துக்கொண்டு டூப்பு அடிக்கிறார் ஸ்டாலின்’ - இபிஎஸ் விமர்சனம்
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 2) கிருஷ்ணகிரியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

“அதிமுகவை பாஜகவிற்கு அடகு வைத்துவிட்டதாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். எந்த காலத்திலும், எந்த கட்சிக்கும் அதிமுகவை அடகுவைத்த வரலாறு கிடையாது. இது எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி. இன்றைய தினம் தமிழ்நாட்டின் வலிமையான கழகம் என்றால் அது அதிமுக மட்டும்தான். உங்களைப்போல ஒன்றும் காங்கிரஸுக்கு அடிமையாக இல்லை.

ஒருகாலத்தில் திமுகவை மிரட்டி அடிபணியவைத்து கூட்டணி வைத்த வரலாறு நாட்டிற்கு தெரியும். அதிமுக கூட்டணி வலிமையான கூட்டணி. அதிமுக ஆட்சி அமைக்கும்.

இரண்டே மணிநேரத்தில் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டை முடித்த கட்சி அதிமுகதான். அடுத்தடுத்து வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை என ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது அதிமுக.

ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி இழுபறியை தமிழ்நாடே அறியும். அதிக கட்சிகளை கொண்டு கூட்டணி அமைத்தாக ஸ்டாலின் கூறுகிறார். 2021 தேர்தலில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகித்ததோ அதே கட்சிகள்தான் இப்போதும் இருக்கின்றன. புதிதாக ஒரு கட்சி சென்றுள்ளது தேமுதிக. அது 2021-ல் வாங்கிய ஓட்டு சதவீதம் அரை சதவீதம். அதை வைத்துக்கொண்டு டூப்பு அடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

ஆனால் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வலிமையான கூட்டணி. அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளோம்.

ஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் எனக்கூறுவார் ஸ்டாலின். திமுகவும், காங்கிரஸும் ஒரேக் கொள்கையா, கம்யூனிஸ்டும் திமுகவும் ஒரேக் கொள்கையா, விசிகவும், திமுகவும் ஒரேக் கொள்கையா, கேரளாவில் காங்கிரஸும், கம்யூனிஸ்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. கொள்கைக் கூட்டணி அல்ல கொள்ளையடிக்கும் கூட்டணி. மாநிலத்திற்கு மாநிலம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

10 ஆண்டுகளாக தொடரும் இந்தக் கூட்டணி திமுகவின் எந்தக் குறைகளையும் எடுத்து சொல்லவில்லை. திமுகவிற்கு துதி பாடியது. அடிமையாக கூட்டணியை வைத்துள்ளீர்கள். உங்களை தாங்கிப்பிடித்த கூட்டணிகளுக்கு கடந்தமுறையை இடங்களை குறைத்து கொடுத்துள்ளீர்கள்.

கூட்டணி பிரதிநிதி ஒருவர் பேச்சுவார்த்தை முடிந்து வெளியேவந்து அழுதுகொண்டே சிரிக்கிறேன் எனக் கூறுகிறார். இப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு நம்மைப்பற்றி விமர்சிக்கிறார் ஸ்டாலின்.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com