அஜித்குமார் கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. 2-வது நாளான இன்று மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அஜித்குமார் கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை
Published on

மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவரை நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக கொலை தொடர்பாக அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார், புகார் கொடுத்து நிகிதா, உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவில் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்களும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

இந்த நிலையில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கைதாகி சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவர்களை காவலில் எடுக்க சி.பி.ஐ. தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் இன்று மாலை 5.30 மணிக்கு அவர்களை ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் 5 போலீஸ்காரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தொடங்கினர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்ததாக தெரிகிறது.

2-வது நாளான இன்று காலை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அஜித்குமார் கொலை வழக்கில் நெருக்கடி கொடுத்த மேலதிகாரி யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் போலீஸ்காரர்களிடம் பெற்றதாக தெரிகிறது.

இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com