திமுக தோல்விக்கு காரணம் - மகளிர் உரிமைத்தொகை முதல் சேகர்பாபு வரை? கசிந்த தகவல்...

தேர்தல் களத்தில் திமுக அரசு - திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தோல்விக்கு காரணம் - மகளிர் உரிமைத்தொகை முதல் சேகர்பாபு வரை? கசிந்த தகவல்...
Published on

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இதனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ந்தேதி 36 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர்கள், இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கருத்துக்கள் கேட்டு அறிக்கை தயார் செய்தனர்.

இதை 19 குழுவினரும் தொகுதி வாரியாக அறிக்கையாக தயார் செய்து அந்த அறிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் திமுகவின் தோல்வி குறித்து கள ஆய்வு குழுவினர் ஆராய்ந்து அளித்த அறிக்கையில் இருந்து சில விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில்,

* கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

* மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்களே முட்டுக்கட்டை போட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* பல முறை காத்திருந்தும் அமைச்சர்களை பார்க்க முடியாமல் திரும்பி சென்றதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

* தேர்தல் களத்தில் திமுக அரசு - திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றதாக தெரிய வந்துள்ளது.

* கட்சியில் உள்ள இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தவில்லை.

* அறநிலையத்துறை கோவில் அறங்காவலர் குழு நியமன பொறுப்புகளில் உண்மையான திமுகவினருக்கு பொறுப்பு அளிக்கவில்லை.

* அதிமுகவில் இருந்து வந்தவர்கள், சேகர்பாபுவுக்கு வேண்டியோருக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. கட்சி பொறுப்பில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை.

* டெண்டர் பெரும்பாலும் திமுகவினருக்கு ஒதுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* மகளிர் உரிமைத்தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்காதது கிடைக்காத மகளிரிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com