

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் வழங்கினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
காவல் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைகளில் இப்பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சாந்தி என்பவருக்கு மட்டும் அரசுப் பணிக்கு பதிலாக ரூ. 10 லட்சம் ரொக்கமாக கருணைத்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் இந்த செயலை பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
“பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாரிசுகளுக்கு வேலைகொடுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. படித்து தேர்வு எழுதி பலர் உள்ளனர். அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். இவர்களுக்கு கொடுத்தது தவறில்லை, ஆனால் முன்னுரிமை அடிப்படையில் கொடுத்திருக்க வேண்டும்.
விஜய்யின் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு கொடுப்பது சுயநலமாக இருக்கிறது. பணம் கொடுப்பது மட்டும் லஞ்சமல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுப்பதும் லஞ்சம்தான்.” என தெரிவித்துள்ளார்.