தேர்தல் வெற்றிக்காக பழனியில் குவியும் அரசியல் கட்சியினர்- எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள் வழிபாடு

கொங்கு மண்டலத்தில் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 21 தொகுதிகள் உள்பட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றியை பதிவு செய்யும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Published on

பழனி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தங்கள் கட்சி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என உறுதியாக தெரிவிக்க இயலவில்லை. இதனால் பிரதான கட்சிகள் முதற்கொண்டு எதிர்கட்சி வரை தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்குமா? என தவித்து வருகின்றனர்.

இதனால் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களின் குடும்பத்தினரும் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதன்படி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர், பெரிய மாரியம்மன், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மனமுருக வழிபட்டனர். இதே போல் முன்னாள் அமைச்சர்களான பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் தனித்தனியாக பழனி கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என பொய்யான கருத்துகளை பரப்பி வருகின்றனர். வருகிற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற முடியாது. 2011-ம் ஆண்டும் அவர்கள் இதே போல்தான் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட தி.மு.க.வால் பெற முடியவில்லை. அதே நிலைதான் இப்போதும் ஏற்படும். வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு காரணம் தி.மு.க. ஆட்சியின் மீதான எதிர்ப்பையே காட்டுகிறது.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார். த.வெ.க. வின் வாக்கு வங்கியால் அ.தி.மு.க.வுக்கு எவ்வித பாதிப்பும் வராது. கொங்கு மண்டலத்தில் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 21 தொகுதிகள் உள்பட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றியை பதிவு செய்யும். செந்தில் பாலாஜிக்கு கரூரில் தோல்வி உறுதி என தெரிய வந்ததால் கோவையில் போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு கோவை மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், விஜய்யின் வருகையால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஒரு பலமான அடித்தளம் கொண்ட இயக்கம். பழனி முருகன் மண்ணில் இருந்து சொல்கிறேன். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட முன்னோடி திட்டங்களை இன்று வரை மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.

அதே வேளையில் தி.மு.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் தேர்தலில் நல்ல முடிவை தருவார்கள். ஒட்டு மொத்த தமிழகத்தின் விருப்பமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைதான் எதிர்பார்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com