நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு- தொகுதி மக்களுக்கு பட்டா, ரேசன் கார்டு வழங்குகிறார்

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில் பொது மக்கள் தங்களது குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம்.
முதலமைச்சர் விஜய்- பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகம்
முதலமைச்சர் விஜய்- பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகம்
Published on

முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

அலுவலகம்

தொகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான​ நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மாநகர், 1-வது தெருவில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச.ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் போடப்பட்டு 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளை கேட்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

நாளை திறந்து வைக்கிறார்

இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் நாளை பிற்பகல் 3 மணிக்கு திறந்து வைக்கிறார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நாளை முதல் முறையாக அவர் தனது தொகுதிக்கு செல்வதால் அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து அதனை நவீன மயமான எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்றி உள்ளனர்.

எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு முதல்-அமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்று ஆய்வு செய்கிறார். புதுரேசன் கார்டுகள் மற்றும் பட்டா ஆகியவற்றையும் பொது மக்களுக்கு அவர் வழங்குகிறார்.

புதிய செயலி

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில் பொது மக்கள் தங்களது குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம். பெரம்​பூர் தொகுதி மக்​கள் தங்​களது குறை​களை​யும் புகார்​களை​யும் தொகுதி எம்​.எல்.ஏ.​வான முதல்-அமைச்சரிடம் நேரடி​யாகத் தெரிவிக்​கும் வகை​யில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்​கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்​யேக செல்​போன் செயலியையும் நாளை அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார்.

அடிப்படை தேவைகள்

இந்​தச் செயலி மூலம் பெரம்​பூர் தொகுதி மக்​கள் தங்​களின் அடிப்​படைத் தேவை​களான மின்​சா​ரம், சாலை வசதி, குடிநீர், துப்​புர​வுப்​பணி, கல்வி மற்​றும் மருத்​துவ உதவி​கள், அரசு நலத்​திட்​டங்​கள், வீட்டு வசதி உதவி, வேலை ​வாய்ப்பு, வணி​கம் மற்​றும் சட்​டரீ​தியி​லான ஆவண உதவி​கள், அவசர உதவி​கள் உள்​ளிட்ட அனைத்​துப் பிரச்​சினை​கள் குறித்​தும் நேரடி​யாக முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்​துக்​குக் கொண்டு செல்ல முடி​யும்.

சில நொடிகளில்

இந்தச் செயலி மூலம் பொது​மக்​கள் தங்களது புகாரைப்​ ப​திவு செய்ததும் அடுத்த சில நொடிகளி​லேயே, அது பெரம்​பூர் எம்.எல்.ஏ. அலு​வல​கத்தை சென்​றடை​யும். புகார் சமர்ப்​பிக்​கப்​பட்​ட​வுடன், அதை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான உறுதிபடுத்தல் குறுஞ்செய்தி புகார்​ அளித்தவரின் செல்​போன் எண்​ணுக்கு செல்லும் வகையிலேயே செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தவர்கள் தங்களது புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். புகார் அளிக்கப்பட்டது முதல் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது வரை தங்களது மனுக்கள் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தொகுதி மக்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

3 நாட்கள்

முதல்-அமைச்சர் விஜய் அறிமுகப்படுத்தும் இந்​தச் செயலி மூலம் பெறப்​படும் புகார்​கள் மீது குறைந்​த​பட்​சம் 3 நாட்​களுக்​குள் முதற்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்பட உள்​ளது. குடிநீர், மின்​சா​ரம், சாலை வசதி, துப்​புரவு பணிகள் போன்ற அத்​தி​யா​வசி​யப் பிரச்​சினை​களுக்கு அதி​கபட்​ச​மாக 10 நாட்​களுக்​குள் முழு​மை​யான தீர்வு காணப்​பட்​டு, அது குறித்த விரி​வான பதிலை மக்​களுக்கு செயலி வழி​யாகவே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்​பூர் தொகு​தி​ எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இச்​செயலியைப் பிரத்​யேக​மாகக் கண்​காணிப்​ப​தற்​கான நவீன கட்​டுப்​பாட்டு அறையும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ‘டிஜிட்​டல்’ மக்​கள் சேவை செயலி பொது​மக்​களுக்​கும் அரசு அதி​காரி​களுக்​கும் இடையே ஒரு பால​மாகச் செயல்​படும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மக்கள்

நாளை திறக்கப்பட உள்ள பெரம்பூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் இன்று நேரில் சென்று பார்த்து புகைப்படங்களையும் எடுத்தனர். இந்த அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பெரிய காம்பவுண்ட் சுவரில் த.வெ.க. அரசின் சாதனைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம், சிங்கப்பெண் திட்டம் ஆகியவை பற்றிய புகைப்படங்கள் முதல்-அமைச்சர் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ளது.

நாளை நடைபெறும் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகளை போலீசார் இன்றே தொடங்கி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com