

சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம் அமைக்கப்பட்டது.
மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் இந்த மையம் செயல்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 55 இடங்களில் தானியங்கி குடிநீர் எந்திரத்தை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். தானியங்கி குடிநீர் மையத்தை சென்னை குடிநீர் வாரியம் பராமரித்து வருகிறது. தானாகவே தண்ணீரை நிரப்பிக் கொள்ளும் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்கள் இந்த குடிநீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள மையமும் மிகுந்த பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் இந்த குடிநீர் மையம் களை இழந்து காணப்படுகிறது.
பெரம்பூர் ஜமாலியா போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள குடிநீர் மையம், பெரம்பூர் பஸ் நிலையத்தில் உள்ள மையம் ஆகியவை மிக மோசமான நிலையில் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய அந்த மையத்தின் அருகிலேயே குப்பைகளும், தண்ணீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்த தயங்குகிறார்கள்.
குடிநீர் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, அதனை வழங்கக்கூடிய சுற்று பகுதியும் தூய்மையாக இருக்க வேண்டும் . குடிநீரை பருகக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு செய்கின்ற நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு முறையாக சென்று பயனடைய வேண்டுமென்றால் அதனை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். ஏதோ திட்டம் செயல்படுகிறது, தண்ணீர் வழங்குகிறோம் என்று நினைத்து கவனிக்காமல் போனதால் ஒரு சில சுத்திகரிப்பு மையங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சுற்றிலும் பராமரிக்காமல் போனதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்லவே முகம் சுளிக்கிறார்கள். பல கோடி செலவு செய்து மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் கட்டணம் இல்லாமல் சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்கினால் அதனை துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பெரும்பாலான குடிநீர் மையங்களில் சில்வர் டம்ளர் இல்லை, அங்கு நின்று குடிநீர் குடிக்கக் கூடிய சூழல் இல்லை, அருவருக்கத்தக்க நிலையில் தான் இந்த மையம் மாறி போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் காட்சி பொருளாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.