

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதற்கிடையே, மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816-ஆக உயர்த்துவதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் வரும் 16-ம் தேதி கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது 3 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு உறுதி செய்தார். மத்திய அரசு கூட்ட உள்ள இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816 ஆக அதிகரிப்பது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் கொண்டு வரப்போவதாக செய்தி வந்துள்ளது. அடுத்ததாக தொகுதிகளை மறுவரையறை செய்யும் மசோதாவும் கொண்டு வரப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதில் பெரிய பேராபத்துகள் உள்ளன. ஒன்று தமிழ்நாட்டில் 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகளில் உள்ளனர். மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகள் உள்ளன. அதில் 28 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளனர்.
மொத்தம் 67 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளால் அவைக்கு வர முடியாத சூழலை உருவாக்கி மசோதாக்களை நிறைவேற்ற அரசு முயல்வதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்து வாக்களித்தால் இரு அவைகளிலும் இந்த மசோதா தோல்வி அடையும். அதற்காகவே தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல் இருக்கும் நிலையில், அவையை கூட்டுவதாக நாங்கள் நம்புகிறோம். இது சதி, அரசியல் சாசனத்தில் மோசடி. 67 உறுப்பினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்ன அரசியல் சாசனம் நிறைவேற்றுவீர்கள்?
தேர்தல்கள் முடிந்த பிறகு ஏப்ரல் 29-ம் தேதி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் மேலும் குறையும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நடவடிக்கையை கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.