பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

ரூ.100 கோடி நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை
PalaniTempleLandScam
Published on: 

பழனி மலையடிவாரத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறித் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றத் தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலையடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.

1888 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி கோயிலின் பராமரிப்பு மற்றும் ஆன்மீகப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டதாகும். இந்த இடத்தை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றவோ சட்டப்படி அனுமதி யாருக்கும் இல்லை.

கோயில் நிர்வாகம் இந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, பக்தர்களுக்காக இலவச வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், இந்த நிலத்திற்குச் சம்பந்தமில்லாத தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், திருப்புகழ் ஆகியோர் தங்களைப் பொறுப்பாளர்கள் எனக் கூறிக்கொண்டு, கடந்த ஜூலை 6-ஆம் தேதியன்று வெள்ளைதுரை, சேதுபதி ஆகிய இரு நபர்களுக்கு இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்குக் கிரயம் செய்து விற்றுள்ளனர்.

ஒரே நாளில் நடந்த முறைகேடு - சார்பதிவாளர் சஸ்பெண்ட்

பழனி சார்பதிவாளர் விடுமுறையில் இருந்த சமயம் பார்த்து, கொடைக்கானல் சார்பதிவாளராகப் பணியாற்றி வந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்குப் பழனி சார்பதிவாளர் அலுவலகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

அவர் பொறுப்பேற்ற ஒரே நாளில் தகுதியில்லாத போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அவசர அவசரமாகப் பதிவு செய்துள்ளார்.

மோசடி வெளிச்சத்திற்கு வந்ததும், கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டார். தற்போது அந்தப் பத்திரப்பதிவு ஆவணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு..

இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.

சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்?

இந்த மோசடியின் பின்னணியில் பெரிய அளவிலான சதி மற்றும் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து சம்பந்தப்பட்டிருப்பதால், முறையான மற்றும் தீவிரமான விசாரணைக்காகத் தற்பொழுது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com