

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, கடைசியாக நடித்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ளதால், திருப்பூரில் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜூலை 23இல் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சுமார் 1,000 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக, முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும், பிரத்தியேக டி-ஷர்ட் அணிந்து முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் டி-ஷர்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்த அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூரியர் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.
நடிகராக இருந்து முதலமைச்சராக உருவெடுத்துள்ள விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய பிரத்தியேக டி-ஷர்ட்களுக்கு, தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் பெருமளவில் ஆர்டர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு திரைப்பட வெளியீடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள், பிரத்தியேகமான ஜனநாயகன் டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரத்துடன் பணியாற்றி வருகின்றன,” என்று கூறினார்.
மேலும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான கே. சேவா நாதன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்த அளவிலான உற்சாகத்தை நாங்கள் கண்டதில்லை.
தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றது,” என்று கூறினார்.