எங்களுடைய பங்காளிகள்: அ.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்தால் என்ன தவறு?- ஆர்.எஸ்.பாரதி கேள்வி

அ.தி.மு.க.வினர் எங்களுடைய பங்காளிகள்தான். அ.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட் டணி வைத்திருந்தால் என்ன தவறு என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதிஆர்.எஸ். பாரதி
Published on

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்துள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் நேற்று முன்தினம் பரபரப்பு கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தால் என்ன தவறு? என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகத்துக்கு பதில்

இந்த தேர்தல் யார் நண்பர்கள், பகைவர்கள்? என்பதை எங்களுக்கு அடையாளம் காட்டி உள்ளது. மிக விரைவில் மாற்றம் வரும். அப்போது நாங்கள் யார்? என்பதை அவர்களுக்கு காட்டுவோம். அ.தி.மு.க. என்பது ஏதோ தீண்டத்தகாத சக்திபோல் இவர்கள் (கம்யூனிஸ்டு) பேசுகிறார்கள். ஏன். இவர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ராஜ்ய சபா எம்.பி. பதவி வாங்கவில்லையா?. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறவில்லையா?. அப்படியே நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன உலக மகா தவறு இருக்கிறது?.

சிபிஐ, சிபிஎம்

1964-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி உடைந்து சி.பி.எம்., சி.பி.ஐ. என்று பிரிந்தது. எலியும், பூனையுமாக இருந்த அவர்கள் ஒருமித்த கருத்துடன் போகவில்லையா?. அ.தி.மு.க. எங்களை விட்டு பிரிந்து 54 ஆண்டுகளாகி விட்டது. அ.தி.மு.க. என்பது எங்களுடைய பங்காளி மாதிரி, பகையாளி என்பது கொள்கைரீதியாக பா.ஜனதாதான்.

சட்டசபையில் ஒரே வரிசை

தற்போது சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக ஒரே வரிசையில்தானே அமர்ந்துள்ளோம். இப்படி உட்கார வைத்து, காலம் கனிய வைத்துவிட்டது. 1977-ல் இருந்து அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் நாங்கள் எதிர்க்கட்சியாக, நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள். தற்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்கும் தொண்டர்கள் 2 கட்சிகளும் உள்ளே இணைந்து விட்டார்கள் என்று கருதுகிறார்கள். இந்த இணைப்புக்கு காரணம் இவர்கள்தான். (தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்).

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோவும் வெளியேறுவது உறுதி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து விலகி உள்ள நிலையில், ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? விலகுவதா? என்ற முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில், ம.தி.மு.க.வும் விலகல் முடிவைத்தான் எடுக்க போகிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் ஒரு அதிசயம் நடந்துள்ளதால், பலவீனமானவர்கள் பலியாகி விட்டார்கள். உறுதியாக இருப்பவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com