

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நலம் ஏ.ஐ. என்ற வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் எண் 96192 22999 பதிவு செய்து ஹாய் என செயலாக்கத்தை தொடரலாம்.
இந்த வசதியை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று பரிசோதனை முறையில் தொடங்கி வைத்தார். இதே போல மை ஹாஸ்பிடல் செயலி அவர் தொடங்கி வைத்தார். கியூ.ஆர். குறியீடு அடிப்படையிலான கழிவறை கண்காணிப்பு முறை தொடங்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை எப்போதும் சுத்தமாக பராமரிக்கும் பொருட்டு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கழிவறையை பயன்படுத்தும் பொதுமக்கள் அங்கு ஒட்டப்பட்டுள்ள கியூ.ஆர். குறியீட்டை தங்களது மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தவுடன் மொபைல் திரையில் கழிவறை சுத்தமாக உள்ளதா என்ற கேள்வி ஆம், இல்லை என்ற இரு விருப்பங்களுடன் தோன்றும்.
கழிவறை சுத்தமாக இல்லாத பட்சத்தில் பொதுமக்கள் இல்லை என்பதை தேர்வு செய்ய வேண்டும். இந்த தகவல் உடனடியாக அந்த தளத்தின் தரை தள இன்சார்ஜிக்கு எச்சரிக்கை செய்தியாக அனுப்பப்பட்டு அவர் உடனடியாக துப்புரவு பணியாளரை நியமித்து சுத்தம் செய்ய அறிவுறுத்துவார்.
10 நிமிடங்களுக்குள் கழிவறை சுத்தம் செய்யப்படவில்லை என்றால் அடுத்த எச்சரிக்கை செய்தி மேலாளருக்கும் 30 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யப்படாவிட்டால் மருத்துவமனையில் முதல்வருக்கும் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் உயர்மட்ட எச்சரிக்கையாக சென்றடையும்.
இந்த 2 வசதிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை நான் நேரில் பார்த்தேன். இணைய வழியில் மருத்துவ சேவையை பதிவு செய்யும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது முதல் அமைச்சரின் எண்ணமாகும். தனியார் மருத்துவமனைகளுக்கு முன் பதிவு இல்லாமல் செல்ல மாட்டோம். புற நோயாளிகள் முன்பதிவு செய்யும் முறை எளிதாக்கப்பட்டு உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. வாட்ஸ் அப் மூலம் முன் அனுமதி பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ பயனாளி இல்லாமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒரு நபர் ஸ்மார்ட் மொபைல் போன் வைத்திருந்தால் போதும். அந்த மொபைல் போன் மூலமாக மருத்துவமனையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.