BJP| தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிக்கிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.
BJP| தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிக்கிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Published on

நெல்லையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த தி.மு.க. கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளர் ஆர்.கே. ராஜா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணி வைப்பது என்பது அவர்களின் உரிமை. இதைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன்.

தி.மு.க. கூட்டணி பலமானது என்ற பேச்சுகளை மறுக்கிறேன். மக்களிடம் இது குறித்துப் பேச்சு இல்லை. எவ்வளவு பெரிய பணபலம் இருந்தாலும், இந்தியாவை டாட்டாவோ, பிர்லாவோ ஆள முடியாது. தி.மு.க.விடம் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கலாம்.

ஆனால் மக்கள் மனம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். 5 வருஷத்துக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு 300 மடங்கு உயர்த்தி உள்ளனர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு உயர்த்தி விட்டனர். மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.

தமிழகத்திற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசு இதுவரை ரூ.14 லட்சம் கோடி வழங்கி உள்ளது. ஆனால், மாநில அரசு எதையுமே தரவில்லை எனப் பொய் கூறுகிறது. ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கு, மாநில அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டி தங்களது திட்டம் போல காட்டி வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 8,900 படுகொலைகள் நடந்துள்ளது. அதில் 1,977 கொலைகள் பெண்களுக்கு எதிராகவும், 387 கொலைகள் குழந்தைகளுக்கு எதிராகவும் நடந்துள்ளது.

பிளஸ்-2 தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண் பெற்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கொடூரமானது. லாக்கப் மரணங்கள் மற்றும் போலீஸ் நிலையத்திலேயே பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் உள்ளது. பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வர உள்ளார். அவர் வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி இறுதி செய்யப்படும்.

அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம். தோல்வி பயத்தினால் தொகுதி மாறுவதாக என்னை பற்றி ஓ.பி.எஸ்.சின் மகன் கூறி உள்ளார். இதுகுறித்த விமர்சனங்களுக்கு, நான் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பதில் சொன்னால்தான் சரியாக இருக்கும்.

சர்வதேச அளவில் நிலவும் போர்ச்சூழலால் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. இன்னும் 10 முதல் 15 நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தேர்தல் நேரத்தில் மட்டும் பணத்தை வாரி இறைத்து மக்களை ஏமாற்ற தி.மு.க. முயற்சிக்கும். ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com