திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
Published on

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அவைத்தலை வர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்ததற்கு கழக தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிவித்த பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை 15-ந்தேதி (இன்று) அனைவரது வங்கிக் கணக்கிலும் வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் விஜய் அந்த தொகையை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செயற்குழு நன்றி தெரிவிப்பது. சட்டமன்றத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், அளித்த வாக்குறுதிகள் (மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, இலவச பஸ் பயணம், 6 சிலிண்டர்கள் போன்றவை) குறித்தும் கேள்வி எழுப்பி, மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகர கழக செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர், அணிக ளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com