

திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் படி தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோட அழைக்க அடித்தளம் அமைத்த ஊர் தருமபுரி.
மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையை தருமபுரியில்தான் விதைத்தோம். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம் தருமபுரியில் தொடங்கப்பட்டது.
புதிய சாதனை திட்டங்களை தொடங்கும் இடமாக தருமபுரி உள்ளது. தருமபுரியில் ரூ.1,714 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால் அது வியாபாரம்; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்.
இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாடல் திராவிட மாடல் என்ற அளவுக்கு தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக எல்லோருடைய வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் போது நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்கள் போராடுவார்கள். அனைத்து எம்.பி.க்களும் நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டுள்ளேன். போராட்டத்தில் வெல்லும் வரை நமது உரிமைக் குரல் அடங்கக் கூடாது.
எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழ்நாட்டின் முதுகிலும் குத்தப் பார்க்கிறார். தருமபுரியில் 3 மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்றது அதிமுக. 3 மாணவிகளை எரித்த 3 பேரை விடுதலை செய்த அதிமுக, பாஜகவுடன் கரம் கோர்த்துள்ளார் அன்புமணி.
நாடு முழுக்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் அன்புமணி கூட்டணி. அதிமுக, பாஜகவுக்கு கூஜா தூக்கி தமிழ்நாட்டுக்கும் ராமதாசுக்கும் துரோகம் செய்தவர் அன்புமணி.
ரூ.8,000 கூப்பனில் தங்களுக்கு பிடித்த வீட்டு உபயோக பொருட்களை பெண்கள் வாங்கிக் கொள்ளலாம். முதியோர் உதவித் தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் தொகுதி எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டும். குனிந்தே பழகிய பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைநிமிர்வது பிடிக்கவில்லை என தெரிவித்தார்.