வெற்றி நிச்சயம்! விழிப்புடன் இருப்பது அவசியம்!- மு.க.ஸ்டாலின்

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
வெற்றி நிச்சயம்! விழிப்புடன் இருப்பது அவசியம்!- மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வாக்குப்பதிவு நாள் விழிப்புணர்வு மடல்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பா.ஜ.க. தலைமையில் அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் ஒன்றிய அரசால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பா.ஜ.க.வுக்கு போடும் வாக்குதான் என்பதை உணர்ந்திருப்பதாலும், பீகாரைப் போல தமிழ்நாட்டையும் பா.ஜ.க. பின்வாசல் வழியாக கபளீகரம் செய்துவிடும் என்பதாலும், பா.ஜ.க தலைமையில் அ.தி.மு.க. இணைந்துள்ள கூட்டணியை முறியடித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம் என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் உறுதியான முடிவு.

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவாரூரில் மார்ச் 31 அன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். ஏப்ரல் 21 அன்று உங்களில் ஒருவனான நான் போட்டியிடும் என் கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்திருக்கிறேன்.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, அந்தக் கூட்டங்கள் நடக்கின்ற ஊரில் காலை நேர நடைப்பயணத்துடன் பொதுமக்களுடனான சந்திப்பு - கலந்துரையாடல், சாலை வலம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தால் தமிழ்நாட்டின் நீள அகலத்தின் பரப்புக்கு இணையாக உங்களில் ஒருவனான என்னுடைய பயணமும் அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்புத் திட்டங்களான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற ஏராளமான திட்டங்களை மக்களே என்னிடம் எடுத்துச் சொன்னதுடன், 2026 தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை, இல்லத்தரசி திட்டத்தின் 8000 ரூபாய் கூப்பன், விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன மோட்டார் பம்பு, கல்லூரிகளின் செயற்கை நுண்ணறிவுக் கல்வி, நான் முதல்வன் திட்டத்தில் இளைய தலைமுறைக்கு திறன் பயிற்சியுடன், வேலை கிடைக்கும் வரை ஊக்கத் தொகை போன்ற வாக்குறுதிகளையும் மக்களே நினைவுபடுத்தி வரவேற்று மகிழ்ந்தனர்.

நம் அரசியல் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகளைத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ளி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியையும் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக உடன்பிறப்புகள், தி.மு.க போட்டியிடும் தொகுதிகளிலும், தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கின்றனர். தோழமைக் கட்சியினரும் கழகம் போட்டியிடும் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட உடன்பிறப்புகளின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும்.

ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் பாக நிலை முகவர்களை (BLA 2) நியமித்து, பத்து உறுப்பினர்களைக் கொண்ட பாகக் குழுக்களையும் (BLC) அமைத்து, அதில் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இடம்பெறச் செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டிஜிட்டல் பூத் ஏஜண்ட் எனப்படும் BDA-க்களையும் நியமித்து ஒவ்வொரு பூத் வாரியாக தேர்தல் களப் பணியை மேற்கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன், ஓரணியில் தமிழ்நாடு செயல்பாட்டின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று, அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளனர் கழக உடன்பிறப்புகள்.

அன்பு உடன்பிறப்புகளே.. நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.காரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய அன்புக் கட்டளை.

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் (War Room) மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் தகவல்கள், வாக்குப்பதிவு நாளன்றும் தொடர்ந்திடும். கழகத்தின் சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.

கழகத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

வாக்கு பதிவன்று BLA 2 மற்றும் BLC, BDA ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் கழக நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17C-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும்.

வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்CU, பேலட் யூனிட்BU, வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்தVVPAT ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்

மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜெண்ட் பங்கேற்பதுடன், , VVPAT காகிதச்சீட்டுகளைEVM எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் “ZERO” என்று காட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளைத் தனியாக பிங்க் காகித கவரில் (PPS) வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பம் இட வேண்டும்.

வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கையையும்(CU+BU+VVPAT எண்கள் போன்றவை) இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தறுவாயில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, பின்பு CU பட்டனில்Close என்று தேர்தல் அதிகாரி அழுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17C உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும்.

கடைசியாக, படிவம் 17C நகல் பெற்று CU + BU + VVPAT இயந்திரங்கள் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு(Strong Room) மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம்17C நகலினை தவறாமல் பெற்று அதன் அசலினை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும். மென்நகலினை(Soft Copy) தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடியில் கழகத்தினர் கண்ணியமான முறையிலும், கவனமான வகையிலும் தங்கள் பணியை மேற்கொண்டு, நமக்கு ஆதரவான ஒரு வாக்குகூட விடுபடாதபடி செயல்பட வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான திராவிட மாடல்2.0 ஆட்சி அமைவதற்கான களம். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கான களம். தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்பவர்களையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஒருசேர வீழ்த்துகிற களம். வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே!

விழிப்புடன் பணியாற்றி வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com