TN Assembly Election | பெண்கள் பிடித்த பொருட்களை வாங்கவே ரூ.8 ஆயிரம் கூப்பன் - மு.க.ஸ்டாலின்

நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்.
TN Assembly Election | பெண்கள் பிடித்த பொருட்களை வாங்கவே ரூ.8 ஆயிரம் கூப்பன் - மு.க.ஸ்டாலின்
Published on

திருச்சியில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சாதிக் கலவரம் இல்லை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை. உத்தரபிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை.

இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்திருக்கிறோம். அமைதியான சூழலும், திறமையான மனித வளமும், நம்முடைய ஆட்சியில் இருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது.

இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான தெளிவான செயல்திட்ட அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் அறிவிப்புகள் பல இருக்கிறது. நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். ஹை லைட்டாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் சில வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்கிறேன்.

மாதம்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என்பதை இரண்டு மடங்காக இனி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க போகிறோம். என்ன மகிழ்ச்சிதானே?

அதேபோன்று, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதாமாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோன்று, காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்த நாம் அறிவித்திருக்கிறோம். மேலும், 15 லட்சம் மாண ர்கள் அதனால் பயன் பெறப் போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப் போகிறது.

அதேபோன்று, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம்.

இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ வேவ் அவன், இண்டக்‌ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்குப் பிடித்த கடைகளிலேயே உங்களுக்குப் பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாகப் பார்த்து, இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு ரூபாய் கூப்பன்? தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறோம்.

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இதைப் பற்றித்தான் ஒரே பேச்சாக இருக்கிறது. நம்முடைய பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, அவர்களுக்குப் பிடித்த கடையில், அவர்களுக்குப் பிடித்த டிசைனில், அவர்களுக்குப் பிடித்த கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதை மனதில் வைத்து தான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இல்லத்தரசி திட்டத்தில் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் எல்லாமே ‘உங்கள் சாய்ஸ்’தான்.

அதேபோன்று, உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். அனைவரும் பழைய பம்பு செட்டு வைத்திருப்பார்கள்.

சில அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக கரண்ட் செலவாகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பீர்கள். அதை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அரசே இனி வாங்கித் தரும்.

நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையைச் சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி.

தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் படுகுழிக்குத் தள்ளிய அ.தி.மு.க.வும், இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்குக் கொண்டு சென்றிருக்கும் பா.ஜ.க.வும் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு இந்தத் தேர்தலிலும் வழக்கம்போல் படுதோல்வியைதான் நீங்கள் பரிசாக தர வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com