என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் அணி மாறும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்- பி.எம்.மன்னனை தொடர்ந்து எஸ்.ஆர்.கோபியும் அ.தி.மு.க.வில் சேருகிறார்
    X

    அ.தி.மு.க.வில் இணைந்த பி.எம்.மன்னன்

    மதுரையில் அணி மாறும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்- பி.எம்.மன்னனை தொடர்ந்து எஸ்.ஆர்.கோபியும் அ.தி.மு.க.வில் சேருகிறார்

    • கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
    • உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    மதுரை:

    தி.மு.கவின் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவரும், அவரது தந்தையுமான மு.கருணாநிதியால் நீக்கப்பட்டார்.

    இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஷ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, உதயகுமார், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 12 பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து மதுரை தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தி.மு.க. தலைமை கட்சியில் சேர்க்க தொடர்ந்து மவுனம் சாதித்தது.

    இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதமும் அனுப்பினர். மேலும் தலைமை கழக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். ஆனாலும் இவர்களை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க முட்டுக்கட்டை நீடித்து வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுத்தி வைத்தனர். எந்த கட்சிக்கும் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

    இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் அவர்களது ஆசை நிராசையாகவே இருந்து வந்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இனியும் பொறுமை காப்பது தங்களது அரசியல் வாழ்வுக்கு பாதகமாக அமைந்து விடும் என கருதிய அவர்கள் மு.க.அழகிரியிடம் இதுதொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

    நானும் உங்களை தி.மு.க. தலைமை கட்சியில் சேர்த்து கொள்ளும் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. எனவே உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 17-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

    அப்போது பேசிய பி.எம்.மன்னன், மதுரையில் அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தி தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரை அ.தி.மு.கவில் சேர்க்க கட்சி தலைமை புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    பி.எம்.மன்னனை தொடர்ந்து முன்னாள் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளருமான எஸ்.ஆர்.கோபி இன்று அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தெரியவந்து உள்ளது. அவருடன் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேருகிறார்கள்.

    மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தி.மு.க. அதிருப்தி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆகியோரையும் திரட்டி அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களில் சிலர் மட்டுமே அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களையும் தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. தலைமை வலை விரித்துள்ளது.

    ஆனால் அவர்களில் சிலர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி தி.மு.க. தலைமை மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து தி.மு.க. தலைமை விரைவில் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், அண்ணன் அழகிரி என்ன சொன்னாலும் நாங்கள் அவரது கண் அசைவுக்கு கட்டுப்படுவோம். அவர் யாரையும் மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும் சிலர் தங்களது சுயதேவைகளுக்காக வேறு கட்சிகளில் சேருகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    அண்ணன் அழகிரி மீது முழுமையான நம்பிக்கை கொண்ட எங்களை போன்றோர் எந்த நிலையிலும் வேறு கட்சிக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.

    மு.க.அழகிரி ஆதரவாளர்களின் இருவேறு நிலைபாடுகள் காரணமாக மதுரை அரசியல் களத்தில் விறுவிறுப்பான அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.

    Next Story
    ×