தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் ஊழல், கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம்- மாணிக்கம் தாகூர்

என் அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாகம் மற்றும் அறிவைப் பற்றி பேசுவதற்கு முதலில் அதற்கான தகுதியும் அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.
தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் ஊழல், கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம்- மாணிக்கம் தாகூர்
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக கூட காங்கிரசார் சந்திக்கவில்லை என்றும் துரோகி என்றும் தி.மு.க. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார். இதனிடையே, முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முரசொலி கட்டுரையை படித்த பிறகு ஒரு கேள்விதான் எழுகிறது.

2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா?

மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது.

தி.மு.க. பல தேர்தல் தோல்விகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞர் இருந்தார். தோல்வியை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக்கொண்டு, காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை.

மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது.

தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்தார்கள். “திராவிட மாடல்” என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, “கமிஷன் மாடல்” அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது.

அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான அரசியல் தண்டனையைத்தான் மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர்.

இன்று தமிழக அரசியலில் மக்கள் கேட்கும் கேள்வி வேறு.

மே4 தேதி மாலை

பாஜகவை எதிர்ப்பதாக பேசிக்கொண்டே, பாஜகவுடனும் அதிமுகவுடனும் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்ன?

மக்கள் அளித்த தீர்ப்பை தடுக்கவும், அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்தவும் நடைபெற்ற ரகசிய முயற்சிகள் என்ன?

இப்போது அன்பு தலைவர் ராகுல் காந்தி பற்றி பேசுகிறார்கள்.

தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல.

பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும், அதானி ஆதிக்கத்தையும், ஜனநாயக அமைப்புகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் தேசிய தலைவர் அவர்.

என் அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாகம் மற்றும் அறிவைப் பற்றி பேசுவதற்கு முதலில் அதற்கான தகுதியும் அரசியல் ஒழுக்கமும் வேண்டும். தினமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு அவரது மதியைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும்.

மக்கள் ஏற்கனவே ஒரு செய்தியை தெளிவாக சொல்லிவிட்டார்கள்:

ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com