

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
27 கொண்டை வளைவு ஊசி கொண்ட திம்பம் மலைப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சாலையோரம் தடுப்பு சுவரில் சிறுத்தை படுத்திருப்பதும், சாலைகளை கடந்து செல்வதுமாக இருந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் சென்று வருகின்றனர்
இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவு உள்ள ஒரு தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி சிறுத்தை அமைந்திருப்பதை பார்த்து தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தார்.
பின்னர் அந்த சிறுத்தை ஒவ்வொரு தடுப்பு சுவராக தாவி குதித்து சென்றது. சிறிது நேரம் தடுப்பு சுவரில் நின்றிருந்த அந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
சில நாட்களாகவே திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்