கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக சட்டமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான கடைசி நாள் 6-ந் தேதியாகும்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும், நாம் தமிழர் கட்சியினர் தனியாகவும், தமிழக வெற்றிக்கழகம் தனி அணியாகவும் களத்தில் நிற்கின்றன. இதனால் தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்வதிலும், தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் தமிழக தேர்தல் களம் தற்போது அனல் பறக்கிறது.

இதேபோல தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பிரசாரத்தை முடித்ததும் நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் பிர மாண்ட வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சியின்போது வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசிய அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் வேட்பாளர், திமுகவினர் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர்.

இன்று காலை 9 மணி அளவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான மகேஷ், நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com