

“அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது” என விசிக தலைவர் திருமாவளவன் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பேசியிருந்தார்.
இதற்கு சொந்த கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும்? ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும், வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது.
காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம்.
கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளர்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல; அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும், அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிர்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. கூட்டணியில் மரியாதையும், பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தாது; மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும்.
மேலும், இது காங்கிரஸ் கட்சி பின்பற்றும் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டத்தில் பங்கேற்று எங்களை விமர்சிக்கலாம்; எங்கள் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டலாம். அந்த விமர்சனங்களை கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு.
அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது. ஆனால் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவை பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
காங்கிரஸின் வளர்ச்சி கூட்டணிக்கு அச்சுறுத்தல் அல்ல; அது கூட்டணியின் மொத்த வலிமையை அதிகரிக்கும் ஒரு அவசியம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் காக்கும் சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் அச்சமாக பார்க்காமல், அதை கூட்டணியின் பலமாக பார்க்க வேண்டும்.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அரசியலமைப்புச் சாசனத்தின் மதிப்புகளையும் காக்கும் போராட்டத்தில் அதுவே சரியான அணுகுமுறையாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.