நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

நீட் தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Educationist Jayaprakash Gandhi
Published on

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மே மாதம் நடந்தது. தேர்வு நடப்பதற்கு முன்பே வினாத்தாள் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 20 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

இதில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் அரியானாவைச் சேர்ந்த பான்சூல் பன்சால் ஆகிய இருவரும் 720 மதிப்பெண்ணுக்கு 715 பெற்று முதலிடத்தை பிடித்தனர்.

கடந்தாண்டை ஒப்பிடும்போது நீட் தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் நீட் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கட்-ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

நீட் தேர்வில் 690-க்கு மேல் கடந்த ஆண்டு ஒருவரும் பெறவில்லை. ஆனால் இந்த வருடம் 85 பேர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல 600 மதிப்பெண்ணுக்கு மேல் 1367 பேர் கடந்தாண்டு பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 9,080 பேர் வாங்கியுள்ளனர்.

550 மதிப்பெண்ணுக்கு மேல் இந்த ஆண்டு 38 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு 12,280- ஆக இருந்தது. 500 மதிப்பெண்ணுக்குமேல் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பெற்றுள்ளனர். இது கடந்த வருடம் 52,217 ஆக இருந்தது.

இந்த மறு தேர்வு முடிவை வைத்துப் பார்க்கும்போது நீட் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.

நீட் மறு தேர்வு கடினமாக இருந்தாலும் கூட கடந்த ஆண்டு தேர்வை விட இந்த வருடம் மாணவ, மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளில் மட்டுமன்றி மாநில அரசு களின் மருத்துவுமனைகளிலும் சேர்ந்து படிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு 680-க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். நாட்டின் தலை சிறந்த மருத்துவமனைகளில் சேர்வதற்கு உயர் மதிப்பெண் அவசியமாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை அதிகரிக்ககூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com