சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
Rain
Published on

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

பலத்த மழை

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே கடலூர் மாவட்டம் முழுவதும் காலையில் வெயிலும், மதியத்திற்கு பிறகு மழை வருவது போன்று கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலையில் கடும் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு அப்படியே காலநிலை மாறியது. வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.

தொடர்ந்து இரவில் கடலூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சில மணி நேரங்கள் இந்த மழை நீடித்தது.

காட்டுமன்னார் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குமராட்சி, லால்பேட்டை, கந்தகுமாரன், சேத்தியா தோப்பு, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால், அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழையையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

மழை காரணமாக காட்டுமன்னார் கோவிலில் உள்ள கடைவீதி வெறிச்சோடியது. கடைவீதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது.

குளிர் காற்று

இதேபோன்று சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள வடலூர், பரங்கிப்பேட்டை, கிள்ளை, புவனகிரி, நெல்லிக்குபபம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில வாரங்களாகவே கடலூர் மாவட்டம் முழுவதும் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்றிரவு பெய்த மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த திடீர் மழை காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com