

சென்னை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
“நிர்வாகிகளாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த கூட்டணியில்தான் இன்னும் தொடர்கிறோம். இது யாரும் எதிர்பாரத தேர்தல் முடிவு. தேர்தலில் வெற்றி, தோல்விகள் என்பது சகஜம். இன்று மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் நிலை என்னவென்பது அனைவருக்கும் தெரியும். யாரை தீயசக்தி என்று சொன்னார்களோ, அவர்களின் ஆதரவோடுதான் அந்த தூயசக்தி இன்று ஆட்சி அமைத்துள்ளார்கள்.
புதிய ஒரு கட்சிக்கு 6 மாத காலம் வாய்ப்புதர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நிலைமை அப்படி இல்லை. எந்த பேரத்திற்கும், எந்த பதவிக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான். பணத்திற்காக, பதவிக்காக, சோஃபா செட்டிற்காக இல்லாமல், பயணிக்கும் கூட்டணிக்கு உண்மையாக இருக்கிறது தேமுதிக.
நாம் நினைத்திருந்தால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யை வீடுதேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி கிடையாது தேமுதிக.” என தெரிவித்தார்.