

திண்டுக்கல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீப நாட்களில் பலரது செல்போன் எண்களில் ஒரு குறுஞ்செய்தி வந்த வண்ணம் உள்ளது. அதில் தேர்தல் ஆணையத்தால் தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பெயர் சேர்ப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் அனுப்பப்பட்ட நிலையில் இந்த குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை புதுப்பித்தல், திருத்தம் செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் தற்போது எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் தனிப்பட்ட முறையில் தேர்தல் ஆணையம் எந்தவொரு வாக்காளருக்கும் லிங்க் அனுப்பாது. இணையதள மோசடி நபர்கள் வங்கி கணக்கு மற்றும் உங்களைப் பற்றிய விபரங்களை லிங்க் வாயிலாக திருடி பணத்தை அபகரிக்கக் கூடும். எனவே வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது தொடர்பான புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைதளம் மற்றும் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் இந்த லிங்க் குறித்து தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தயாரித்த வீடியோ மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.