

அ.தி.மு.க.வில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 82 பேரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்த மாவட்ட செயலாளர்கள் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மேற்கு- பி.வி.ரமணா, திருவண்ணாமலை தெற்கு- அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தென் சென்னை தெற்கு கிழக்கு- எம்.கே.அசோக், நெல்லை மாநகர்- தச்சை கணேச ராஜா, கடலூர் தெற்கு- சொரத்தூர் ராஜேந்திரன், ராமநாதபுரம்- முனியசாமி, திருவள்ளூர் கிழக்கு- மாதவரம் மூர்த்தி, தென்சென்னை தெற்கு மேற்கு- விருகை ரவி, திண்டுக்கல் மேற்கு- திண்டுக்கல் சீனிவாசன், கள்ளக்குறிச்சி- குமரகுரு, அரியலூர்- தாமரை ராஜேந்திரன், கன்னியாகுமரி கிழக்கு- தளவாய் சுந்தரம், தென்சென்னை வடக்கு கிழக்கு- ஆதிராஜாராம், வடசென்னை வடக்கு மேற்கு- திருமங்கலம் மோகன், மதுரை புறநகர் மேற்கு- ஆர்.பி. உதயகுமார், வட சென்னை வடக்கு கிழக்கு- ஆர்.எஸ்.ராஜேஷ், வட சென்னை தெற்கு மேற்கு- நா.பாலகங்கா, திருவாரூர்- ஆர்.டி.மூர்த்தி (புதியவர்), தர்மபுரி-டி.ஆர்.அன்பழகன் (புதியவர்), செங்கல்பட்டு மேற்கு- சிட்லபாக்கம் ராஜேந்திரன், விழுப்புரம்- பசுபதி (புதியவர்), சென்னை- தி நகர் சத்யா, தேனி கிழக்கு -முருக்கோடை ராமர்,
ஈரோடு புறநகர் கிழக்கு- கருப்பண்ணன், திருப்பூர் மாநகர்- பொள்ளாச்சி ஜெயராமன், விருதுநகர் மேற்கு- ராஜேந்திரபாலாஜி ஆகிய 26 மாவட்டச் செயலாளர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களில் பலரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
இருப்பினும் மொத்தம் உள்ள 82 மாவட்ட செயலாளர்களில் இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எத்தனை பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களை அவரது தரப்பினர் இன்னும் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக அவர்கள் தரப்பில் ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனக்கு எத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இன்றைய கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.
ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் யாரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்களில் முதன்மையானவராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ள இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இதுவரை ஆதரவு தெரிவிக்காத நிலையில் யாருடைய பக்கம் சாய்வது என்கிற குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தவிர எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வரும் சில மாவட்ட செயலாளர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு இன்று வருகை தர இருப்பதாக பரபரப்பான தகவல்கள் காலையில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமைக் கழகம் முன்பு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கண்காணிப்பு வாகனம் ஒன்றும் தயார் நிலையில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து சிலர் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதுடன் தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
அதுபோன்று இன்றும் யாரும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் 2½ மணி நேரம் நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது அங்கு கூடி நின்ற அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா கூறும்போது, “இன்று நடைபெற்ற கூட்டத்தில் 80 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
ஆனால் அ.தி.மு.க. சார்பில் யார் யார் பங்கேற்றனர் எத்தனை பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்பது பற்றிய விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
அ.தி.மு.க. கோஷ்டி பூசல் நீடிக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய மாவட்ட செயலாளர் கூட்டத்தை அ.தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான டி.ஜெயக்குமார் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.