முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு - திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Anitha radhakrishnan
Published on

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கடந்த ஜூன் 20-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், ஒருமையில் பேசியதாகவும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் த.வெ.க., நகரச் செயலாளர் செல்வம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்ஜாமின் மனு

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அடைந்துள்ள அதிருப்தி குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்து பேசினேன். அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் என் மீது இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி

அதை படித்து பார்த்த நீதிபதி, “அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண மனிதர் கிடையாது. அவர் முன்னாள் அமைச்சர். தற்போது எம்எல்ஏ. அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், அவருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரில் வருவதாக கூறியும் ஏற்க மறுத்த போலீசார் காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு முழக்கமிட்ட நிலையிலும் போலீசார் அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com