

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அனைத்து சொத்து விற்பனை மற்றும் சேவைகளையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் வீடு, மனை மற்றும் வணிக வளாகங்களை வாங்க பொதுமக்கள் இனி அலுவலகங்களுக்கு அலைந்து திரியாமல், ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து வாங்கும் வசதி ஏற்பட உள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அந்த இலக்கை இன்னும் அடைய முடியவில்லை. வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் நேரில் சென்று தகவல் பெறுதல், விண்ணப்பித்தல், ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இருந்தன. இதனால் காலதாமதம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளும் அவ்வப்போது எழுந்தன.
இதையடுத்து, வாரியத்தின் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி.ராஜ்குமார், வாரியத்தின் அனைத்து சேவைகள், எதிர்கால வீட்டுத் திட்டங்கள் மற்றும் சொத்து விற்பனை நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைன் தளத்திற்கு மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது இந்த பணிகள் மூழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, வீட்டு வசதி வாரியத்தில் டிஜிட்டல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் அவை முழுமை பெறவில்லை. தற்போது ஆன்லைன் போர்டல் தயாராக உள்ளது. வீடுகள், மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் சுமார் 10 ஆயிரம் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகள் இணையதளத்தில் இடம்பெற உள்ளன. இதில் சுமார் 4 ஆயிரம் சொத்துகளின் விவரங்களை பதிவேற்றும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகள் அடுத்த 15 நாட்களுக்குள் நிறைவடையும்.
டிஜிட்டல் மயமாக்கல் நிறைவடைந்த பிறகு, விற்பனையாகாமல் உள்ள வீடுகள், மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்படும். சொத்தின் இருப்பிடம், விலை, பரப்பளவு, காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும், புதிய வீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும்போது, விண்ணப்பம் பெறுதல் முதல் ஒதுக்கீடு மற்றும் விற்பனை வரை பெரும்பாலான நடைமுறைகள் ஆன்லைன் வழியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இடைத்தரகர்களின் தலையீடு குறைவதுடன், செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது முழுமையான டிஜிட்டல் நடைமுறைக்கு மாறுவதன் மூலம் மனித தலையீட்டை குறைத்து, பொதுமக்கள் எளிதாகவும் வெளிப்படையாகவும் வீடுகளை வாங்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது.