தி.மு.க. அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தால் கட்சியை விட்டு நீக்குவேன்- அ.தி.மு.க.வினருக்கு இ.பி.எஸ். எச்சரிக்கை

அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது.
தி.மு.க. அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தால் கட்சியை விட்டு நீக்குவேன்- அ.தி.மு.க.வினருக்கு  இ.பி.எஸ். எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

அ.தி.மு.க.வினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பல்வேறு கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசி உள்ளார். திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. மீண்டும் அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருச்சி உள்பட பல மாவட்டங்களில் தி.மு.க. அமைச்சர்களுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது அதிரடியை காட்ட தொடங்கி இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com