

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.