தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை - இ.பி.எஸ். குற்றச்சாட்டு

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க. ஆட்சிதான். செம்மண் குவாரி வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை - இ.பி.எஸ். குற்றச்சாட்டு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்துக்கும், டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். நடைபெற உள்ளது சட்டப்பேரவைத்தேர்தல், மக்களவைத்தேர்தல் அல்ல. தி.மு.க. கூட்டணி அடிமை கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி வலிமையான கூட்டணி. ஓரே கொள்கை உள்ள கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிக்களுக்கு ஒரே கொள்கையா? மக்களை ஏமாற்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார். முரண்பாடாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியதாக வெளியான ஆடியோவால் ஸ்டாலினுக்கு இரு நாட்களாக தூக்கம் தொலைந்து விட்டது. அதிர்ந்து போயிருக்கிறார்.

உடல்நலகுறைவாக இருந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதி, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தெரிவித்தால், என் மீது எறிந்து விழுகிறார். ஆ.ராசாவை கண்டிக்க பயம். அவரை கண்டித்தால் பல உண்மைகள், பல ஆடியோ வெளிவரும் என அஞ்சுகிறார்.

கமிஷன், கொள்ளை, பாலியல் சீண்டலில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க. ஆட்சிதான். செம்மண் குவாரி வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பிறழ்சாட்சி, ஆவணங்களை சமர்பிக்காதது போன்ற காரணத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் விசாரணை நடத்தப்படும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணமில்லா பஸ் என ஸ்டாலின் கூறும்போது, ஓசி பஸ் என பொன்முடி கூறினார். அரசாங்க பணத்தில் கட்டணம் இல்லாமல் மக்கள் பயணிக்கின்றனர். உங்கள் அப்பா வீட்டு பணம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஆண்களும் கட்டணமில்லாமல் அரசு பஸ்சில் பயணிக்கலாம். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை கொடுத்த மோசமாக ஆட்சிதான் இது.

காட்டுமன்னார் கோவிலில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இப்போது தி.மு.க. கொடுத்த அழுத்தம் காரணமாக, பின்வாங்கி இருக்கிறார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளால், சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை. அவர்கள் வெந்து புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் கஞ்சா போதையால், குற்றச்செயல் அதிகரித்துள்ளது. சிறுமி முதல் மூதாட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 3 மாதத்தில் கஞ்சா விற்பனையை அறவே ஒழிப்போம். முந்தைய நிதி அமைச்சர் பேசியாக வெளியான ஆடியோவில் 2 ஆண்டில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் உதயநிதியும், சபரீசனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தி.மு.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அவர்களை கைது செய்கின்றனர். இவர்கள், தேர்தலில் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,500 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ரத்து செய்துவிட்டார்கள். தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்கை மூடி விட்டார்கள். அம்மா உணவகத்தை செயலிழக்க செய்துவிட்டனர். அ.திமு.க. ஆட்சிக்கு வந்ததும், இவைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெறும். கூட்டுறவு துறைகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும். மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் தொடங்கப்படும். மிகப்பெரிய ஊராட்சிகள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com