வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தம்

வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பை பனைமட்டை கொண்டு மூடிவைக்கும் தொழிலாளர்கள்.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பை பனைமட்டை கொண்டு மூடிவைக்கும் தொழிலாளர்கள்.
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது . தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை எட்டிய நிலையில் விற்பனை போக ஒரு லட்சம் டன் உப்பு உற்பத்தி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மேலும் அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்கள் விவசாயம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்கின்றனர்.

இதையடுத்து உப்பத்தில் சேமித்து வைத்துள்ள உப்பை பனை ஓலைகள் மற்றும் தார்பாய்களைக் கொண்டு தொழிலாளர்கள் முழுமையாக மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. மழைக்கால விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பிற்கு கூடுதல் விலை கிடைக்கும் எனவும் மீண்டும் மூன்றுமாத ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com