‘அ.தி.மு.க.வைப் போல பா.ம.க.வையும் உடைக்க தி.மு.க. விஷமிகள் முயன்றனர்’ - இபிஎஸ்

அதிமுகவைப்போல பாமகவையும் உடைக்க திமுக பல திட்டங்களைப் போட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘அ.தி.மு.க.வைப் போல பா.ம.க.வையும் உடைக்க தி.மு.க. விஷமிகள் முயன்றனர்’ - இபிஎஸ்
Published on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டவாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில், பாமக தலைவர் அன்புமணியுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

“நான் முதலமைச்சரானபோது என்னென்ன பிரச்னைகளை சந்தித்தேனோ, அதேபோன்று அன்புமணி ராமதாஸ் அவர்களும் நிறைய பிரச்னைகளை சந்தித்துவிட்டார். எல்லா பிரச்னைகளையும் வென்றுவிட்டுத் தான் நாங்கள் உங்களை சந்திக்கிறோம். எப்படியாவது அதிமுகவை சிதறடிக்க வேண்டும் என்று திமுக பல அவதாரம் எடுத்தது. அதேபோல் பாமவை உடைக்க வேண்டும் என்று சில விஷமிகள் உதவியுடன் முதலமைச்சர் போட்ட திட்டத்தை தவிடுபொடியாக்கினார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

இனி அதிமுகவையும் வீழ்த்த முடியாது, பாமகவையும் வீழ்த்த முடியாது. ஸ்டாலின் எண்ணம் நிராசையாகிவிட்டது. அவர் கண்ட கனவு ஒன்று, நடந்தது ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லாத கேவலமான ஆட்சி நடைபெறுகிறது.

நமது செல்வம் குழந்தைகள். நமது குழந்தை செல்வத்தை சீரழிக்கக்கூடிய ஆட்சி தேவையா….? இதற்கெல்லாம் காரணம் கஞ்சா விற்பனை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை விற்பனை அமோகமாக நடக்கிறது.

போதையால் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் சீரழிகிறார்கள். போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.

மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். இதெல்லாம் எப்போது நடக்கிறது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்பு சொல்வதால் என்ன பயன்..? எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com