என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை- அமைச்சர்
    X

    திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை- அமைச்சர்

    • இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது.
    • தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம்.

    திருச்சி:

    துணை முதலமைச்சர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர தி.மு.க. இளைஞர் அணியின் சார்பாக கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொற்கிழி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

    தற்போது பி.டி. அசிஸ்டன்ட் 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் உள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

    இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம்.

    தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம். மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல ஆட்சியை தி.மு.க. தந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தை துணை பொதுச்செயலாளர் கூறிய கருத்துக்கள் குறித்து அவர்கள் இயக்கத்துக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அண்ணன், தம்பி உறவோடுதான் உள்ளது. இது கொள்கைக்கான கூட்டணி.

    அதனால்தான் இந்த கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணியில் பிளவு ஏற்படாதா என்று நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதெற்கெல்லாம் நாங்கள் இடம் தரமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அம்பேத்கர் புத்தக விழாவில், திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு தி.மு.க. கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேட்ட போது, திருமாவளவன் ஒரு சுயமரியாதைக்காரர். அவ்வளவு எளிதாக யாரும் அவருக்கு அழுத்தம் கொடுத்துவிட முடியாது. அவர் மிகப்பெரிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம் என்றார்.

    Next Story
    ×