சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல்- மலேசிய பெண்ணிடம் போலீஸ் தீவிர விசாரணை

கள்ள நோட்டுகளை வைத்து இருந்தவரை பிடித்து திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல்- மலேசிய பெண்ணிடம் போலீஸ் தீவிர விசாரணை
Published on
சென்னை போலீசார் கள்ள நோட்டு கும்பலின் சர்வதேச பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கள்ள நோட்டு விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அவர்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடுவதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இது போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கள்ளநோட்டுகள் தொடர்ந்து புழக்கத்திலேயே இருந்து வருகிறது.

சென்னையில்

அந்த வகையில் சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் தற்போது சிக்கி உள்ளது. இதற்கு முன்னரும் பலமுறை கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும் இந்த முறை பிடிப்பட்டு உள்ள கள்ள நோட்டு கும்பலுக்கு சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணி பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

திருவல்லிக்கேணி

சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவல்லிக்கேணி தசூதீன் கான் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று லாட்ஜ் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

ரூ.11 லட்சம்

இதில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 300 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கியது. 25 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சிகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டுகளை வைத்து இருந்தவரை பிடித்து திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

சபீக் ரகுமான்

கள்ளநோட்டுகளை வைத்து இருந்த நபரின் பெயர் சபீக் ரகுமான் என்பது தெரிய வந்தது. 37 வயதான இவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சபீக் ரகுமான் டூர்ஸ் அன்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அப்போதுதான் அவருக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

தஞ்சையை சேர்ந்தவர்

சபீக் ரகுமானிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (44) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரி யவந்தது. ரவிச்சந்திரனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவோணம் ஆகும். அவர் தற்போது தஞ்சை பிலோ மினா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கான ஏஜெண்டாக செயல்பட்டு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

வணிக நிறுவனங்கள்

இவர் தஞ்சையில் இருந்து சென்னைக்கு சென்று அங்கு வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் மலேசியாவில் வேலை பார்த்து உள்ளார். அப்போதுதான் அவருக்கு கள்ளநோட்டு கும்பலோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பெரிய அளவில் அவர் பணமும் சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

வியாபாரிகள்

மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த பின்னர் தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பில் இருந்தபடியே கள்ள நோட்டுகளை வாங்கி அதனை சத்தம் இல்லாமல் வியாபாரிகளிடம் புழக்கத்தில் விட்டு இருக்கிறார்.

ரவிச்சந்திரன் மூலமாக சபீக் ரகுமானுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்து இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதை தொடர்ந்துதான் ரவிச்சந்திரனும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்.

சென்னையில் இருந்து தஞ்சைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரவிச்சந்திரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளன. அந்த பணத்தின் பின்னணி பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மலேசிய பெண்

கைதான இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கள்ள நோட்டு கும்பலுடன் மலேசியாவை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் தொடர்பில் இருந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் தலைவியாக செயல்பட்ட போதுதான் போலீஸ் பிடியில் அவர் சிக்கி உள்ளார்.

நேற்று காலையிலேயே போலீசார் அவரை பிடித்து விட்டனர். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து புவனேஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

காப்பகத்தில்

இதன் பின்னர் நேற்று இரவு அவரை காப்பகத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்த போலீசார் இன்று காலையில் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

சென்னையில் தங்கி இருந்து புவனேஸ்வரி கடந்த ஒரு மாதமாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு பெண்

கள்ளநோட்டு கும்பலுடன் சேர்ந்து பரிமளா என்ற பெண்ணும் செயல்பட்டு வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இவரும் புவனேஸ்வரியுடன் தி.நகர் ஓட்டலில் தங்கி இருந்து உள்ளார்.

இவர்கள் மூலமாகத்தான் ரவிச்சந்திரனுக்கு கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பரிமளா மலேசியா சென்றுள்ளார். அவரை பிடிப்பதற்கும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அச்சடிப்பு

கள்ளநோட்டுகளை மலேசியாவில் அச்சடித்து பல்வேறு வழிகளில் அவர்கள் தமிழகத்திற்கு கடத்தி வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானம் மூலமாகவும் அவர்கள் கள்ள நோட்டுகளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கைதானவர்கள் நடத்திய சோதனையில் பாஸ்போர்ட்டுகளும் இருந்தன. அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் இந்த கும்பலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னணி பற்றியும் மத்திய மாநில போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து சென்னை போலீசார் கள்ள நோட்டு கும்பலின் சர்வதேச பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கள்ள நோட்டு விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com