

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழவே காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததாக கூறி சிறுமியின் உறவினர்கள் சூலூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறுமி கொலை தொடர்பாக கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் மோகன் ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் எதிர்வீட்டை சேர்ந்த கார்த்திக் போலீசார் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டார். தோட்டத்திற்கு அழைத்து சென்று சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக அவர் தெரிவித்தார். கார்த்திக் அளித்த தகவலின் பேரில் மோகன்ராஜையும் போலீசார் கைது செய்தனர்.
சூலூர் காவல் நிலையம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிற்கு வலது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கை, கால் முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைதான மற்றொருவரான மோகன்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மோகன்ராஜுக்கு 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சூலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.