

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 31-ந்தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து திருச்சி, ஈரோடு ,கோவை மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
2-ம் கட்ட பிரசாரத்தை கடந்த 3-ந்தேதி நெல்லையில் தொடங்கிய அவர் தொடர்ந்து நாகர்கோவில், சங்கரன்கோவில், விருதுநகரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இன்று மாலை 5 மணிக்கு திருமங்கலத்தில் 2-ம் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இதனை தொடர்ந்து 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு புதுவையில் தொடங்குகிறார்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
வருகிற 8-ந்தேதி (புதன்கிழமை) மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசம்ப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு மறைமலைநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், தாம்பரம், பல்லாவரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.