

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, 2-ம் கட்டமாக நெல்லையிலும், 3-ம் கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை முடித்தார்.
நேற்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சையில் இருந்து தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த இலுப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். பேருந்தில் ஏறி பயணிகளிடம் விராலிமலை திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார்.
சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.