

திருச்சி:
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் இன்று திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தஞ்சை வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றார். தஞ்சையில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூர் தெற்கு ரத வீதியில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதை தொடர்ந்து இரவு காரில் திருச்சி வருகை தரும் அவர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் துறையூர் (தனி) தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதன் பின்னர் மாலையில் கரூர் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு ராயனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தலைமையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருச்சி உழவர் சந்தை மற்றும் கரூர் ராயனூர் பகுதிகளில் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த 9-ந்தேதி சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் 12-வது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தர உள்ளார்.